துறையூரில் வடமாநில வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது… * திருச்சி ரயில் நிலையம் வந்தவரை மப்டியில் மடக்கிய தனிப்படை போலீசார்…!
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் மலையப்பன் சாலை அருகே கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார்(22) தர்மேந்திர ஷர்மா(23), சிண்டுகுமார்(22) ஆகியோர் ஒரு வீட்டில் தங்கி தச்சு வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் தர்மேந்திர ஷர்மாவை, சிண்டுகுமார், சச்சின் குமார் ஆகிய இருவரும் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் துறையூர் ஆய்வாளர் முத்தையா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையாளிகள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களிலும் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கொலையாளிகள் திருச்சிக்கு ரயில் மூலம் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரயில்வே ஜங்ஷனில் சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது கொலை குற்றவாளி சச்சின் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிண்டுகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.