காதல் கணவரை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து 2 நண்பர்களுடன் சேர்ந்து கனகச்சிதமாக தீர்த்து கட்டி விட்டு நாடகமாடிய பெண் கைது…!
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வந்தனர். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் இருவரும் வேளாங்கண்ணி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அவர்களை தேடி 2 ஆண்கள் வேளாங்கண்ணிக்கு வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்கி இருந்த அறையை தேடி கண்டுபிடித்து அங்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் இருவரும் ஜனார்த்தனனை வெளியில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகில் உள்ள கருவைக் காட்டில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திய போது எலன் மேரியின் காதல் கணவர் ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக எலன் மேரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது தனது கணவரை 2 பேர் அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று அழுது புலம்பினார்.
இதையடுத்து, பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற சாகர், ஜீவா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், ஜனார்த்தனன் கொலையில் எலன்மேரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஒரே கல்லூரியில் படித்த ஜீவாவும், எலன்மேரியும் காதலித்து வந்ததும், அதற்கு ஜனார்த்தனன் இடையூறாக இருந்ததுடன் எலன் மேரியை திருமணம் செய்து கொண்டதால் அவரை திட்டமிட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் எலன்மேரியையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். எலன்மேரிக்கு ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளதும், 2 வதாக ஜனார்த்தனனை திருமணம் செய்ததும், அவரையும் பிடிக்காமல் ஜீவாவை 3-வதாக திருமணம் செய்ய நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து காதல் கணவரை தீர்த்து கட்டிய சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.