துறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயம்…! (பதை, பதைக்க வைக்கும் வீடியோ)
அரியலூர் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர், துறையூர் வழியாக கேரளாவை நோக்கி பல்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருச்சி மாவட்டம், துறையூர் நாகலாபுரம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கால் முறிந்தது. அந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் உதவியுடன் அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தியதில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண் துறையூர் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி செந்தில் வடிவு என்பது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Comments are closed.