நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாடு இன்று(27-10-2024) விக்கிரவாண்டியில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், சென்னை பெரிய மேட்டில் இருந்து இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில் மணல் லாரி ஒன்று வலது புறமாக திரும்பி உள்ளது. அந்த நேரத்தில் வாலிபர்கள் வந்த இருசக்கர வாகனம் மணல் லாரி மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அந்த மணல் லாரி வாலிபர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் கையில் த.வெ.க. கொடி இருந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநாட்டுக்கு சென்ற தொண்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.