வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளை யடித்த வாலிபர் கைது…!
சிசிடிவி காட்சிகள் மூலம் 24 நேரத்தில் துப்பு துலக்கிய போலீசார்...
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி ரேணுகா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் . நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் துணி தைப்பதற்காக டைலர் கடைக்கு சென்று இருந்தனர். அந்த நேரத்தில் ரேணுகா தனியாக வீட்டில் இருந்தார்.
அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் ரேணுகாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மூணரை பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டார். பின்னர், டைலர் கடையிலிருந்து வீடு திரும்பிய மனோகரன் மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து ரேணுகாவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு கடன் சுமை அதிகமாக இருந்ததால் பக்கத்து வீட்டில் புகுந்து நகையை திருட சென்றதாகவும் அப்போது ரேணுகா சத்தம் போட்டதால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட வந்த ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கொலையை செய்த குற்றவாளியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி கேமராக்களை அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Comments are closed.