108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் அபாயம் நிலவியது. சிமென்ட் மேற்புற பூச்சு உடைந்து கீழே விழாமல் இருப்பதற்காக பலகை, கம்புகளை கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்புற பூச்சுகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாமல் அவ்வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகிலேயே கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகில் செயல்பட்டு வருகிறது.
இதனால், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளும் பயத்துடன் கடந்து செல்கின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபுரத்தை சீரமைக்க வேண்டும், அங்கு முளைத்துள்ள செடிகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான சீரமைப்பு பணிகள் 98 லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீரென கிழக்கு கோபுரத்தில் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. நள்ளிரவு என்பதால் எவ்வித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிந்து விழுந்த கான்கிரீட் கலவைகளை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.