தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார். நேற்று புதுக்கோட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று (மே 25) திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறும் இளைஞரணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன் மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பிரபு, கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் 300 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்க துடிக்கும் மத்திய பாஜக அரசு கீழடி அகழாய்வில் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழக நாகரிக வரலாற்று ஆய்வு அறிக்கையை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தும் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியும் மத்தியஅரசு அந்த ஆய்வு அறிக்கையை இன்னும் வெளியிடாமல் உள்ளது. மத்திய அரசு, அந்த ஆய்வு அறிக்கையில் திருத்தங்களை கூறியுள்ளது.
* தமிழர்களுக்கென்று தொன்மையும், சிறப்பு வாய்ந்த ஒரு நாகரீகமும் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்க துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டிப்பது.
*பெகல்ஹாம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கும், ஆப்ரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது.மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்ட ராணுவ வீரர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்வது.
* மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப்பேரவையை விட ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் கால வரம்பை நிர்ணயம் செய்ததுடன் தமிழக மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் உரிமையை நிலை நாட்டும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை வாங்கித் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்வது.
* மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.
* தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக கட்டமைக்க பாடுபட்டு வரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Comments are closed.