சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்குகள், மஞ்சள் முகம் கொண்ட மைனா சிக்கியது…!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று (24.11.2025) சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வருகை தந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலேசியாவை சேர்ந்த யோகேஸ்வரன் முனியசாமி (வயது 46) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது அவரது உடைமையில் மறைத்து மஞ்சள் முகம் கொண்ட அரிய வகை மைனாக்கள் நான்கும், குரங்குகள் மூன்றும், வெள்ளை வால் கொண்ட கீரி ஒன்றும் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த அரியவகை விலங்குகளையும், மைனாவையும் பத்திரமாக மீட்ட அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது சட்டப்படி குற்றமாகும். அந்த உயிரினங்களை அவர் எதற்காக கடத்தி வந்தார்?, யாருக்காக கடத்தி வந்தார்?என்பது குறித்து பிடிபட்ட பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேநாளில், திருச்சி விமான நிலையத்தில் மற்றொரு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை ஆமைக்குஞ்சுகளும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.