திருச்சி, துவாக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது. மேலும், மாணவ மாணவிகள் தங்க தனித்தனி விடுதியும் கட்டப்பட்டுள்ளன. இந்த அரசு மாதிரி பள்ளி அண்மையில் தான் திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தனபாலின் மகள் பிரித்திகா என்ற மாணவி விடுதியில் தங்கி பிளஸ்-2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இன்று(11-06-2025) வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர் மதிய இடைவேளையின் போது விடுதிக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் மாணவி
வகுப்பறைக்கு வராததால் சக மாணவிகள் விடுதிக்கு சென்று அறையை திறக்க முயன்ற போது திறக்க முடியவில்லை. இதனால் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அறையை உடைத்துப் பார்த்தபோது பிரித்திகா தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மாதிரி பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி தற்கொலை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.