Rock Fort Times
Online News

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை…!

குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில், தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை மீறுபவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால், பிரிவு 110ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். ஏனெனில் குடிபோதையில் வாகனம் இயக்கும் நபர், தன்னுடைய நிலைமையை நன்கு அறிந்து, தன்னால் இயல்பாக வாகனத்தினை செலுத்த இயலாது என்பதனை தெரிந்து, வாகனத்தை இயக்கி பிறரது உயிருக்கும், உடலுக்கும் தீங்கினை ஏற்படுத்தும் குற்றத்தினை செய்கிறார். பொதுமக்கள் தங்கள் உயிர் மற்றும் பிறரின் பாதுகாப்பிற்காக, மதுபோதையில் வாகனம் இயக்கும் செயல்களில் ஈடுபடாமல், சட்டப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்