திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்ட வசதிகள், எதிர்கால பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். குறிப்பாக, ஆம்னி பேருந்துகள் இயக்கத்திற்கான வசதிகள், பயணிகள் காத்திருப்பு கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வணிக வளாக அமைப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி ஆணையர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வில் பங்கேற்றனர்.

Comments are closed.