திருச்சி, துவாக்குடி அருகே ரத்த காயங்களுடன் கிடந்தவர் சாலை விபத்தில் தான் உயிரிழந்தார்- மாவட்ட எஸ்.பி.அலுவலகம் அறிவிப்பு…!
தஞ்சாவூர், விளார் சாலை, அண்ணா நகர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் கோ.ராஜேஷ் (46). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவாக்குடி அரைவட்டச் சாலையில் எலந்தப்பட்டி பிரிவு சாலை அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது இருசக்கர வாகனம் சாலையோரம் கிடந்தது. ஆனால் அவரது உடலில் பலமான வெட்டுபட்டது போல காயங்கள் காணப்பட்டன. எனவே, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாயின. ஆனால், ராஜேஷ் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலை விபத்தில்தான் உயிரிழந்தார். அவர், மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக தேனிக்குச்சென்றபோது, வழியில் திருச்சியில் விபத்தில் சிக்கியுள்ளார். எனவே, அவரது சாவில் மர்மம் ஏதுமில்லையென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக நவல்பட்டு போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.