Rock Fort Times
Online News

நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது: ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இதன் அருகிலேயே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலும் உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளும் அமைந்துள்ளன. ஸ்ரீரங்கத்தில் பயணிகள் மற்றும் பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று செல்ல போதிய பேருந்து நிலைய வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். ஆகவே, ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்றும் பொருட்டு ரூ.11 கோடியே பத்து லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா இன்று(08-01-2026) நடைபெற்றது. விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்ததோடு புதிய பேருந்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது.

இதேபோல திருவானைக்காவல் தாகூர் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், திருவானைக்காவல் அய்யன்வெட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கழிவறை, ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட தெப்பக்குளத் தெரு மற்றும் காமு அம்மாள் தோட்டம் பகுதிகளிலும், திருவானைக்காவல் பகுதிக்குட்பட்ட கல்மேட்டுத் தெரு, ஸ்ரீனிவாசா நகர் மற்றும் வி.எஸ். நகர் பகுதிகளிலும் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 5 பல்நோக்கு அலுவலக கட்டிடங்களையும் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த பல்நோக்கு அலுவலகங்களில் அந்தந்த வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர் அலுவலகம், துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், இ-சேவை மையம் ஆகியவை செயல்பட உள்ளன. இதன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரி செலுத்துதல், மனு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த திறப்பு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்