Rock Fort Times
Online News

கரூர் சம்பவத்தில் காரசார விவாதம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு…!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கரூர் பரப்புரைக்கு த.வெ.க. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர். காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை என கூறினார். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். கரூர் மாவட்ட கலெக்டரின் அனுமதியின்படி, உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனை செய்திட கரூர் அரசு மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவி பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள், உடற்கூராய்வு செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக நான் கேட்டு கொண்டேன். அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என கூறினார். இந்நிலையில், முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசு தவறிவிட்டது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சில விசயங்களை குறிப்பில் இருந்து நீக்கும்படியும் கோரினார். இதனால், இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், காவல் துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை செய்ததுடன், உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். அமைதியாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர் நீக்க கூறிய விசயங்களை நீக்குவேன் என்றும் கூறினார். முதல்-அமைச்சர் அறிக்கையில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை சுட்டி காட்டலாம் என்று துரைமுருகன் கூறினார். எனினும், அவையில் தொடர்ந்து தரையில் அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை முன்னிட்டு, சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்