Rock Fort Times
Online News

திருச்சியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி….

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான (03.02.2023) அன்று தொடங்கப்பட்டு (24.04.2023) வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில், இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு,  சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்படும். நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள சுல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்ப்பட்டன. இதன் மூலம் குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே இத்திட்டத்தின் இலக்காகும் . பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 350க்கும் மேற்பட்ட ஆளுமைகளை கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை நிகழ்த்துவாா்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுனர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமைந்து வருகிறது.
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமையில் இன்று ( 01.09.2023 ) நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் நோக்க உரையாற்றினார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா சமூகநீதிப்பொருளாதாரமும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார் . நேரு நினைவுக்கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார் . கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராஜேந்திரன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார் . இந்நிகழ்ச்சியில் ஆசிாியா்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்