திருச்சியில் 130 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா: பிப்.14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடக்கிறது…!
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகமும், பப்பாசியும் இணைந்து பிப்ரவரி 14 முதல் 22ம் தேதி வரை பிரம்மாண்டமான புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளன. அரசின் ஆணைப்படி, புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் வகையில் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 130 அரங்குகளும், 100 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களும் இதில் இடம்பெறுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் மனதை கவர்ந்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரையும் இடம்பெறுகிறது. இந்த புத்தகத் திருவிழா வருகிற 14-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். இங்கு உணவு ஸ்டால்கள், வாகனம் நிறுத்த இடம் மற்றும் அடிப்படை வசதிகள் என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. நிறைவு நாளான 22ம் தேதி வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் . நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.