கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று(10-06-2024) அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார். விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்றதுடன் பேருந்தும் பலத்த சேதமடைந்தது. பேருந்தின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு பயணிகள் அலறினர். விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து உள்ளே இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய 37 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed.