துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கல்வியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி…* அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு!
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட கழக கல்வியாளர் அணியின் முதல் நிகழ்வு, கழக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கல்வியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி முத்து மகாலில் நடைபெற்றது. விழாவில், கல்வியாளர் அணியின் மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு, கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோஷங்களும், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற சாதனைத் திட்டங்களை பாராட்டி குரல்களும் ஒலித்தன. இதற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் முனைவர் குணசீலன் மற்றும் மாநகர அமைப்பாளர் பொன்முடி ஆகியோரின் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. விழாவில், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, கவிஞர் சல்மா மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கல்வியிலும் அரசியல்…
இந்த நிகழ்வுக்கு பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் சமுதாய கூடத்திலோ அல்லது வாடகை கட்டிடங்களிலோ மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. இருந்த போதும் முதலமைச்சர் கல்விக்கான நிதியை நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அதை வழங்கி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார். ஜாக்டோ- ஜியோ ஜனவரி 6 ம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஜனவரி 6ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். அடுத்து பேசிய எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், நான், ஆண்டாள் வேடம் போட்டது ஒரு நடனத்திற்காக என்னை குறித்து அறிந்தவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு பதில் எதுவும் கூற முடியாது என்றார்.

Comments are closed.