கீழே கிடந்த 45 பவுன் நகைகளை எடுத்து நேர்மையுடன் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர்:* தங்கச் சங்கிலி அணிவித்து ரஜினிகாந்த் பாராட்டு…!
சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தி.நகர் வண்டிக்காரன் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. வறுமையில் வாடினாலும், நேர்மை தவறாத பத்மா, உடனடியாக அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த தங்க நகைகள் யாருடையது என்று போலீசார் நடத்திய விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தங்க நகைகளை தொலைத்ததாக முன்பே புகார் அளித்தது தெரிய வந்தது. அவர் அளித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் நேர்மையுடன் செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். பத்மாவை நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை அவரிடம் வழங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று(பிப்.3) தூய்மை பணியாளர் பத்மாவை நேரில் வரவழைத்து பாராட்டியதோடு, அவருக்கு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கினார்.

Comments are closed.