Rock Fort Times
Online News

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை…! 

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கணேஷ் (எ) ‘தொப்பை’ கணேஷை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது, இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி சென்னை புழல் பகுதியில் உள்ள மகாவீர் கார்டன் பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்திருந்த 6 பேர், விஜயகுமார்  என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, ரூ.25 லட்சம் பணம், சுமார் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு வைரக் கம்மலை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரவுடி ‘தொப்பை’ கணேசன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும், இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று( மார்ச் 16) அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே ரவுடி ‘தொப்பை’ கணேசனை பார்த்த போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு கணேசன் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தொப்பை கணேசனை, போலீசார் உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்கவுண்டரில் உயிரிழந்த தொப்பை கணேசன் மீது வியாசர்பாடி, மாதவரம், சித்தாலப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்