மணப்பாறையில் பயங்கரம்: காதல் தகராறில் வியாபாரி வெட்டிக்கொலை…!
தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) . ஐஸ் வியாபாரி. இவர் இன்று காலை ( 08.07.2023 ) தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு மொபட்டில் பொத்த மேட்டுப்பட்டி கிராமத்துக்கு சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களை பின்தொடர்ந்து இன்னொரு மொபட்டில் அவர்களின் மகன் மாரிமுத்து சென்றார்.2 மொபட்டுகளும் குளித்தலை- மணப்பாறை சாலையில் கலிங்கப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் வந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குப்புசாமியை சரமாரியாக வெட்டினர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் குப்புசாமிக்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதால் சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மாரிமுத்துவின் உறவு பெண்ணை ஒருவர் காதலித்த விவகாரத்தில் குப்புசாமி தரப்பினர் அவர்களை ஏற்கனவே தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதத்தில் திட்டமிட்டு குப்புசாமியை வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் ஐஸ் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.