தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு க. அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் அதற்கான நிதி இல்லாததால் இந்த திட்டம் காலதாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம்
இன்று ( 07.07.2023 ) நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். வருகிற செப்டம்பர் 15 ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், குடும்ப அட்டை, வயது வரம்பு, ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவு. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது. பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.. உச்சபட்ச வயது ஏதுமில்லை. தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.