சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். தவெகவில் இணைந்த இந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்துள்ளது. இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயர் ஜேசிடி பிரபாகர், ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதிமுக கொறடா யார் என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்து அறிவிக்கப்படும். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் அனைவரின் கருத்துக்கும் நான் மதிப்பளிப்பேன். ஆளுநர் உரையின் நகல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் அளிக்கப்படும்” என்றார்.

Comments are closed.