விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் (13.05.2023 ) கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சங்கர், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான விஜயன், 40 வயதான சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 36 பேர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.