Rock Fort Times
Online News

ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மூலதன முதலீட்டு மானியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய முதலாவது ‘சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360’ல் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அவர், தமிழ்நாடு ஜவுளித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டார். ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்திய ஜவுளி வணிகத்தில் மாநிலத்தின் பங்கு 33 விழுக்காடு எனவும் அவர் கூறினார். மேலும், ஜவுளித் துறை மூலம் 31 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும், அதில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார். திராவிட மாடல் ஆட்சியின் கீழ் ஜவுளித் துறைக்கு தனித் துறையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ‘ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2025–2026’ வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாநாடு மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், புதிய சந்தைகளை கண்டறியவும் வாய்ப்பு உருவாகும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்