Rock Fort Times
Online News

வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: பிரபல ரவுடி கொட்டு ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை…

பெரம்பலூரில் பிரபல ரவுடி கொட்டு ராஜா என்பவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இரு தரப்புக்கு இடையே கடந்த 20 ஆண்டுகாலமாக முன்பகை இருந்து வருகிறது. இதில் அவர்களுக்குள் அவ்வப்போது பயங்கர மோதல் ஏற்பட்டு, கொலைகளில் முடிந்து வருகின்றன. இதனிடையே, மேற்குறிப்பிட்ட ஒருதரப்பைச் சேர்ந்த ரவுடியான வெள்ளைக் காளி என்பவர் கொலை வழக்கில் கைதாகி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.இதனிடையே, கடந்த 24ம் தேதி வழக்கு விசாரணைக்காக வெள்ளைக் காளியை, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். வழியில், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலில் வெள்ளைக் காளி மற்றும் போலீசார் உணவருந்தினர் பின்னர் போலீஸ் வாகனத்தில் அவர்கள் ஏற முயன்ற போது, அங்கு இரண்டு கார்களில் வந்த கும்பல், ரவுடி வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் ரவுடி வெள்ளைக் காளி தப்பிவிட, அங்கிருந்த சில போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், பெரம்பலூரை சேர்ந்த பிரபல ரவுடியான அழகுராஜா (எ) கொட்டு ராஜா தலைமையில்தான் இந்த குண்டு வீச்சு சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கொட்டு ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல நாட்டு வெடிகுண்டுகளை அவர் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நாட்டு வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக கொட்டு ராஜாவை போலீசார் இன்று(27-01-2026) அதிகாலை ஜீப்பில் அழைத்து சென்றனர். ஒரு காட்டுப்பகுதி அருகே ஜீப் சென்ற போது, திடீரென கொட்டு ராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. சங்கரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மங்களமேடு இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ரவுடி கொட்டு ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கொட்டு ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டு ராஜா வெட்டியதில் காயமடைந்த எஸ்.ஐ. சங்கர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல ரவுடி கொட்டு ராஜா போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்