மதுராந்தகத்தில் நடைபெற்ற பாஜக- அதிமுக பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் எங்கே?- கு.ப.கிருஷ்ணன் கேள்வி…!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் (1991-96) வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர் கு.ப.கிருஷ்ணன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த போது, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்தார். இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் கு.ப.கிருஷ்ணன் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், அதிமுகவை ஒருங்கிணைக்க எவ்வளவோ முயன்றும் அது நடைபெறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்தளவுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது. தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என எங்கள் தலைவர்களை உயர்த்தி பிடித்து பேசுகிறார். எங்கள் தலைவர்களை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நாங்கள் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.