தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசு தின விழா கோலாகலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…!
தமிழ்நாடு அரசு சார்பில் இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களையும், விருதுகளையும் வழங்கினார். விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “சிதைவுறாத மிக நீண்ட தொடர்ச்சியால் பாரதம் ஜனநாயகத்தின் தாயாக உயர்ந்து நிற்கிறது. நமது மாநிலத்தில் மிகச்சிறந்த மனிதவளம் இருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தேசத்திற்கே முதன்மை என தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாம் ஒரு செழிப்பான விண்வெளி பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த தினத்தில், சுதந்திரத்துக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்வோம்” என்று பேசினார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.