தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜன.26-ல் நடைபெறும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டு பணிகளை பார்வையிட திருச்சி வந்தார் கனிமொழி எம்பி…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். திமுக மகளிர் அணி சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 26-ம் தேதி ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மாநாடு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக செங்கிப்பட்டி அருகே சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கனிமொழி எம்பி-ஐ திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comments are closed.