Rock Fort Times
Online News

அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்த தமாகா, புதிய நீதி கட்சி, த.ம.மு.க…* புதிய தமிழகம் கட்சியும் இணைகிறது!

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கூட்டணி கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா மற்றும் ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணியை உறுதி செய்துள்ளன. கூட்டணியில் இணைந்த கட்சி தலைவர்களுக்கு மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பூச்செண்டு மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகி வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சியை அமைக்கும். தமிழ்நாட்டில் நிலவும் குடும்ப மற்றும் ஊழல் ஆட்சி அப்புறப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும் இணைவது உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சியில் இணைந்த தலைவர்கள் அனைவரும் நாளை( ஜன. 23) தமிழகம் வரும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்