பிரபல எஃப்.எம். நிலைய இயக்குனர் “டைரி” சகாவின் 51-வது பிறந்தநாள் விழா… * அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து!
திருச்சி மற்றும் புதுச்சேரி ஹலோ எஃப்எம் 106.4ல், இரவு 9 மணி முதல் 11 மணிவரை ஒலிக்கும் காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் டைரி சகா. அவரின் 51-வது பிறந்த நாள் மற்றும் 20 ஆண்டுகள் வானொலி பயணத்தை போற்றும் விதமாக சகாவின் நண்பர்கள் நடத்திய விழாதான் “சகா எனும் சகாப்தம்”. டைரி என்ற நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட இதயங்களில் இடம்பெற்றதோடு சமூக முன்னேற்றத்துக்கான பல விஷயங்களை முன்னெடுத்தவர். கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அவருக்கு வரும் ஒரு தனி மனிதனின் எண்ணங்கள், கனவு, கவலை, காதல், கண்ணீர், குடும்பம், போராட்டம், உறவுச்சிக்கல்கள் என்று பல்வேறு உணர்வுகளை தனக்கே உரிய பாணியில் வானொலியில் அவர் வெளிப்படுத்தும் டைரி நிகழ்ச்சி காலத்தால் கொண்டாடப்படும் பொக்கிஷம். எண்ணற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதோடு பலரின் தற்கொலை எண்ணங்களை கைவிட வைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது. தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசு விழாக்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முத்திரை பதித்தவர். ‘ஸ்வச் பாரத்’ இயக்கத்தின் தூய்மை தூதுவராக திருச்சி மாநகராட்சியால் நியமிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தவர். திருச்சிக்கு பலன் அளிக்ககூடிய திருச்சி பவுண்டேஷன்( TRY Foundation ) என்ற அமைப்பின் செயலாளராக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மியாவாக்கி முறையில் அடர்வன காடுகளை திருச்சி மாவட்டம் முழுக்க உருவாக்கியதில் இவரின் பங்கு அசாத்தியமானது. பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகள் இவரை அலங்கரித்துள்ளது. வானொலி நாயகன் சகாவை கொண்டாடும் விதமாக அவரின் பிறந்த நாளான ஜனவரி 16 அன்று திருச்சி, மொராய்ஸ் சிட்டியில் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும், திருச்சியின் பிரபல மருத்துவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், கலைத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்று

பலதரப்பட்ட தளங்களில் இயங்குபவர்கள் கலந்துகொண்டு சகாவையும், அவரின் டைரி நிகழ்ச்சியையும் வெகுவாக பாராட்டினர். நடனம், பாட்டு என்று கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற்ற விழாவில் சகாவை பற்றி பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட காணொளியும் இடம்பெற்றது. டிசைன் பள்ளி மாணவர்கள் வரைந்த சகாவின் ஓவியம் வெளியிடப்பட்டதோடு வந்திருந்தவர்கள் அதில் வாசகங்களை எழுதினர்.

முடிவில் டைரி சகா நிறைவுறையாற்றினார். நிகழ்ச்சியை ஓமர் முக்தார், அருண் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டைரி சகாவின் சகோதரர்களும், நண்பர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.


Comments are closed.