உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது… சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசு!
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் அமர்களமாக நடந்து முடிந்த நிலையில், இன்று (ஜன.17) அலங்காநல்லூரில் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து, வாடிவாசலில் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான காளைகளும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் இன்றைய போட்டியில் பங்கேற்கின்றனர். 10 -12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு எலெக்ட்ரிக் பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் வழங்கப்படுகிறது.

Comments are closed.