சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய விஜய்- பொங்கலுக்கு பிறகு 19ம் தேதி மீண்டும் விசாரணை நடத்த முடிவு?
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. போலீஸ் அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், 100 கேள்விகள்
கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு விஜய் அளித்த பதில்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. விசாரணையின் போது வாய் மொழியாக மட்டுமின்றி, எழுத்துப் பூர்வமாகவும் பதில் பெற்றதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வழங்கப்பட்ட குறுகலான இடம், பொதுமக்கள் எந்த அளவிற்கு வருகை புரிவார்கள் போன்ற விவரங்கள் தெரியுமா?, பிரச்சார இடத்தை சென்றடைவதில் ஏன் தாமதம்?, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது தெரியுமா?, சம்பவம் நடந்த உடன் அந்த இடத்தை விட்டு வெளியேறியது ஏன்?, கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சூழல் எப்போது தெரிய வந்தது?, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் உங்கள் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறு பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் சிபிஐ எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைகள் முடிந்து டெல்லியில் இருந்து விஜய் இன்று (ஜன. 13) சென்னை திரும்பினார். பொங்கல் பண்டிகை முடிந்து விஜய் இடம் ஜனவரி 19ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.