திருச்சி, பாலக்கரையை அடுத்த முதலியார் சத்திரம் பகுதியில் நியாய விலை கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் கடந்த சிலநாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக திருச்சியில் பெய்து வரும் மழையின் காரணமாக முதலியார் சத்திரம் ரேஷன் கடையின் சிமெண்ட் கட்டிடம் மழைநீரில் ஊறி கட்டிடத்தின் மேற்பூச்சு நேற்று இரவு பெயர்ந்து விழுந்தது. இன்று காலை நியாய விலைக் கடை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அந்த சிமெண்ட் பூச்சுகள் அகற்றப்பட்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் தாமதம் இன்றி நடைபெற்றது.

Comments are closed.