Rock Fort Times
Online News

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார் விஜய்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. தேர்தலை முன்னிட்டு கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க.தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். செப்டம்பர் 27ம் தேதி அவர் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம், சிறப்பு புலனாய்வுப் படை ஆகியவை அமைக்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கரூர் வேலுசாமி புரத்தில் பரப்புரை மேற்கொண்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு டேப் வைத்து அனைத்து இடங்களையும் அளந்தனர். இந்தநிலையில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜராக வேண்டும் என அவருக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக இன்று(ஜன.12) சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். சிபிஐ அதிகாரிகள் முன் விஜய் என்ன மாதிரியான கருத்துகளை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்