வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் இன்று(ஜன.10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கையில் திருகோணமலை – யாழ்ப்பாணத்திற்கு இடையே கரையை கடக்கும். இதனால், கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யும். தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதனால், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.