சென்சார் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ‘ஜனநாயகன்’ – விஜய்க்கு அரசியல் கட்சியினர்- நடிகர்கள் ஆதரவு கரம்…!
தமிழ், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் விஜய். திடீரென சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இனி, தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும், அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கட்சி தொடங்கியதில் சந்தோஷப்பட்டனர். அவர் நடித்த கடைசி படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை(09-01-2026) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய் படம் பிரச்சனைக்கு அரசியல் கட்சியினரும், சக நடிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரவிமோகன்: “அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை.. நீங்கள்தான் தொடக்கம். அந்தத் தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் தொடங்கும்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்:சினிமா இன்று கடினமான காலத்தில் உள்ளது. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் இல்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தணிக்கை, சான்றிதழ் தாமதத்தால் ஒத்திவைப்பு. தணிக்கை காலக்கெடு விதிகள் சீரமைக்கப்பட வேண்டும். பிரிவுகளை விட்டு, சினிமாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நடிகர் சிபி சத்யராஜ்: “ஜனநாயகன் வெளியீட்டை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து தருகின்றன. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றிநிச்சயம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல பல சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அரசியல் கட்சியினர்:
விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பிக்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொள்ளுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதேபோல காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக் தாகூர் ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Comments are closed.