Rock Fort Times
Online News

தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணிக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்- சொல்கிறார் டாக்டர் ராமதாஸ்…!

பாமகவை சொந்தம் கொண்டாடுவதில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தரப்பினர் நேற்று(ஜன. 7) சந்தித்தனர். அப்போது, அதிமுக-பாமக கூட்டணி அமைத்துள்ளதாக கூட்டாக அறிவித்தனர். ஏற்கெனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. அன்புமணி யாருடன் சேர்ந்தாலும் அவர்களுக்கு பாமகவினர் உட்பட யாரும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனெனில், தந்தைக்கே துரோகம் செய்த, தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். நேற்று நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது. பாமக சார்பில் கூட்டணி பேசியது என்பது நேற்று நடந்த கூத்து. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது நீதிமன்ற அவமதிப்பு. என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற கூட்டணிதான் வெற்றிபெறும். நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்