போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு திருச்சி பழைய பால்பண்ணை சாலையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு…!
திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 01.01.2026 முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி, தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி–பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும். மேலும், பஞ்சப்பூர்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து இடைநில்லா பேருந்துகளும்( பாயிண்ட் டூ பாயிண்ட்) தஞ்சாவூர் பைபாஸ் சாலையை பயன்படுத்த வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (திருவெறும்பூர்), காவல் துணை ஆணையர் (தெற்கு), வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு காலமுறைப்படி ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.