Rock Fort Times
Online News

பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் வழங்கும் பணி விரைவில் தொடக்கம்: ரொக்கம் எவ்வளவு? எகிறும் எதிர்பார்ப்பு…!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 கிலோ பச்சரிசியும், அதே அளவு சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரும்பு, முந்திரி, திராட்சையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் இலவச வேட்டி – சேலையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டியும், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 சதவீத வேட்டி – சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இந்த முறை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் எவ்வளவு என்பதுதான். தேர்தல் வருவதால் இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின்போது ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. எனவே, திமுக ஆட்சியில் அதைவிட கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். தமிழக அரசும் ரூ.3 ஆயிரம் வழங்குவதா, அல்லது ரூ.4 ஆயிரம் வழங்குவதா என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இது ஒருபுறம் நடந்து வர மற்றொரு புறம் பொங்கல் பரிசு தொகுப்பை நெரிசல் இல்லாமல் விநியோகிக்க உணவு மற்றும் கூட்டுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வீடு, வீடாக டோக்கன் விநியோகித்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டோக்கனும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானதும் தேதி குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும். அனேகமாக, இன்றே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் எவ்வளவு என்ற அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்