ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஹோட்டல்களில் இரவு நேர நடன நிகழ்ச்சிகள், பைக் சாகசங்கள் நடத்துவதற்கு தடை… * திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் அதிரடி!
2025-ம் ஆண்டு நிறைவு பெற்று இன்று( டிசம்பர் 31) இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இதனை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இரவு நேர ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் கூறுகையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 31.12.2025-ம் தேதி இரவு 9 மணிமுதல் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொது மக்கள் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் இன்று (டிசம்பர் 31) புதன்கிழமை இரவு 9 மணி முதல், திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் செல்லவும், பட்டாசு வெடிப்பதற்கும், பைக் சாகசங்கள் (வீலிங்) நிகழ்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டு, 18 இடங்களில் தீவிர வாகன சோதனை செய்யப்பட உள்ளது. இளைஞர்கள் பைக் சாகசங்கள் மற்றும் பைக் பந்தயங்களை தடுக்கும் பொருட்டு, டிராபிக் மார்ஷல் வாகனங்களை கொண்டு கண்காணிக்கவும், மாநகரில் 60 இடங்களில் பிக்கெட் பாயிண்ட் அமைத்தும், 9 சோதனை சாவடிகள் மற்றும் 14 மாநகர ரோந்து வாகனங்களில் போதிய காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகரில் ‘பிங்க் பேட்ரோல்’ வாகனங்கள் மூலம் கண்காணிக்கவும், மக்கள் கூட்டம் நிறைந்த மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி அமைப்புகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி நடமாடும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படும். மேலும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிப்பது மற்றும் ஹோட்டல்களில் இரவு நேர நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கும், காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய துறைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாகச் வாகனத்தில் செல்லுதல், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.