ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று(டிச.30) அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 20ம் தேதி காலை திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதனையடுத்து, தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பகல் 10ம் நாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று (டிச.30) அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா…ரங்கா… என முழக்கமிட்டனர். தொடர்ந்து, நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயகஸ்தம் அணிந்து பரமபத வாசலை கடந்து ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Comments are closed.