12 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லாத ஆசிரியர்கள் போராட்டம்: கோரிக்கை பூர்த்தி செய்யாவிட்டால் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பதாகவும் எச்சரிக்கை..!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன் தெரிவித்ததாவது: “2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த 12 ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். 2018 ஆம் ஆண்டு அரசு, 149-வது அரசாணை மூலம் முன்னதாக தேர்ச்சி பெற்றோர் மீண்டும் நியமனத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தை விதித்தது. இதனால் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், 2.10.2020 அன்று தர்மபுரியில் நடந்த போராட்டத்தின் போது, அரசாணை 149 இருள் சூழ்ந்தது மற்றும் அராஜகமானது என்றும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு நடத்துவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், திமுக ஆட்சி அமைந்த உடன் நியமனத் தேர்வை ரத்து செய்து, வேலை வாய்ப்பு பதிவு முயற்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நம்பி, கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பணியாற்றி வெற்றி பெறச் செய்தோம். ஆனால் இதுவரை பல போராட்டங்களையும் நடத்தியும், 99 போராட்டங்களை செய்து, 60 முறை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.” கோரிக்கை செய்தோர் கூறியதாவது: “வரும் தை 1-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம். மேலும், ‘எங்கள் விரல்களால் திமுகவிற்கு பொங்கல் வைத்து வீடு அனுப்புவோம்’ எனவும் எச்சரிக்கை விடுகிறோம்.”

Comments are closed.