பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.கே.மணி தொடர்ந்து கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமையுக்கும் எதிராக செயல்பட்டு வந்ததால், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கடந்த 18.12.2025 அன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு காரணம் கூற நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலக்கெடு முடிந்தும் ஜி.கே.மணியிடமிருந்து எந்தவித விளக்கமும் பெறப்படாத நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்து, அவரை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்ததாகவும், அந்த பரிந்துரையை ஏற்று இன்று (26.12.2025) முதல் ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments are closed.