கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்: சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.13,842…!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரயில்களில் ரிசர்வேஷன் முடிந்து விட்டதாலும், பஸ்களில் அதிக கூட்டம் காரணமாகவும் சிலர் விமானத்தில் செல்ல விமான நிலையத்தை அணுகினர். ஆனால், சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்ல நேரடி விமானங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதோடு மட்டுமின்றி பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக திருச்சி, கோவை, மதுரை செல்ல வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் நேற்றும், இன்றும் இருக்கைகள் நிரம்பி விட்டன. அதனால், துாத்துக்குடி செல்ல, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணமும் அதிகரித்து, பயண நேரமும் கூடுதலாகி உள்ளது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களில், அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


Comments are closed.