தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23-12-2025) சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர வரவேற்றனர். பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நிலையில், இன்று கூட்டணி தலைவர்களிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.கவினுடைய மையக் குழு நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து தேர்தல் கூட்டணி விவகாரங்கள், தொகுதி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன்ராம் மேக்வா லுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.