Rock Fort Times
Online News

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோஹித் என்ற மாணவன், பள்ளி சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்ததாகவும், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஊர் பொதுமக்களும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் மோஹித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்தார். ஆனால், நிவாரணத் தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அஜாக்கிரதையாக இருந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாணவரின் உடற்கூறு ஆய்வு கோப்புகளில் கையெழுத்திடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மாணவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்தநிலையில், பள்ளி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மோஹித் என்ற மாணவர் இறந்தது வேதனைக்குரிய விஷயம். இந்த செய்தி வெளியானதில் இருந்து தமிழக முதல்வர் மூன்று முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாங்களும் விளக்கத்தை சொன்னோம். 2014ம் ஆண்டில் இந்த பள்ளி கட்டப்பட்டது. யாரும் பயன்படுத்தகூடாத, யாரும் போகக்கூடாது என்பதற்காக அங்கு கட்டுமான பொருட்கள் எல்லாம் சுவர் அருகே வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு வேலை செய்பவர்கள் அந்த கட்டுமான பொருட்கள் முழுமையாக எடுத்து சென்று விட்டனர். அங்கு உட்கார்ந்து படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை பள்ளி சார்ந்திருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அஜாக்கிரதையால் அவர்கள் குற்றம் செய்ததாகத் தான் கருதுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்