Rock Fort Times
Online News

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்: 6 மாநகராட்சிகளில் 4ஐ காங்கிரஸ் கைப்பற்றியது…* திருவனந்தபுரத்தில் பாஜக அமோக வெற்றி!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று( டிச.13) காலை மாநிலம் முழுவதும் தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பல பகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றது. மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன. இதில் விழிஞ்ஞம் என்ற வார்டில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மற்ற 100 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 50 வார்டுகளை கைப்பற்றினால் மேயர் பதவி என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 51-க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, மாநகராட்சியை நிர்வகித்து வந்தது. இந்த முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4-ஐ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியுள்ளது. 1 மாநகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 54 நகராட்சிகளை காங்கிரஸ் கூட்டணியும், 28 நகராட்சிகளை இடது ஜனநாயக கூட்டணியும், 2 நகராட்சிகளை பாஜக கூட்டணியும் வசப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி வாழ்த்து திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை. மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்