தொடர்ந்து ‘கேட்’ போடும் இபிஎஸ்: டிச.25ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாளில் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ள ன. அந்தவகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கூட்டணியையும், கட்சியையும் பலப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி மட்டுமே வலுவாக இருக்கிறது. அதோடு
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர காய் நகர்த்தி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, த.மா.கா.மட்டுமே உள்ளது. இவர்கள் தே.மு.தி.க.வையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணிக்குள் வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக டெல்லி சென்று அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். ஆனால், ஓ.பி.எஸ்.-ஐ சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ‘கேட்’ போட்டு வருகிறார். தற்சமயம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை செய்த நிலையில் அவை பலிக்காததால், அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்தச்சூழலில், டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்ஜிஆரின் நினைவுதினமான டிசம்பர் 25ம் தேதி ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனி கட்சி தொடங்குவாரா? அல்லது விஜயுடன் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments are closed.