உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பி.ஹெச்.இ.எல். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி வாயிற்கூட்டம்…!
திருச்சி, திருவெறும்பூரில் அமைந்துள்ள பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், பெல் நிறுவனம் அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனைதொடர்ந்து தொழிலாளர் நல சங்கத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நான்கு மாதத்தில் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை உடனடியாக அமல்படுத்த கோரி பெல் நிறுவன மெயின்கேட் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் தொமுச பொதுச் செயலாளர் தீபன் தலைமையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் சேகர் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பெல் நிர்வாகம் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Comments are closed.